ஐபிஎல் 2022: எங்கள் அணியின் குட்டி ஏபிடி அவர் தான் - கேஎல் ராகுல் புகழாரம்!
மும்பை வான்கடே மைதானத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. முதல் ஆடிய லக்னோ அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால் அந்த அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். இந்நிலையில் 5ஆவது விக்கெட்டுக்கு தீபக் ஹூடா மற்றும் பதோனி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அந்த ஜோடி 5ஆவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தனர். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீபக் ஹூடா 55 ரன்களும் பதோனி 54 ரன்கள் எடுத்தனர்.
குஜராத் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக முகமது சமி தேர்வு செய்யப்பட்டார். அவர் 4 ஓவரில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டி முடிந்த பிறகு பேட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் இளம் வீரரான பதோனியை பாராட்டியுள்ளார். மேலும் 41 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த அவரை ஏபி டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “பதோனி எங்களின் குட்டி ஏபி டிவில்லியர்ஸ். அவர் முதல் நாள் பேட்டிங் செய்யும் போது நம்ப முடியாத வகையில் இருந்தது. அவரால் அனைத்து திசையிலும் பந்தை அடிக்க முடியும்” என புகழாரம் சூட்டினார்.