ஆஷஸ் தொடர்: ஜோ ரூட்டின் கருத்தை விமர்சித்த ரிக்கி பாண்டிங்!

Updated: Tue, Dec 21 2021 22:11 IST
Image Source: Google

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இதுவரை, இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் இங்கிலாந்து அணி படுமோசமாக தோல்வியடைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த நிலையில், இரண்டாவது போட்டியிலும் 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இரு போட்டிகளிலும் முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தியிருந்தது. குறிப்பாக, இங்கிலாந்து அணி பேட்டிங், பவுலிங் என எதனையும் சிறப்பாக கையாளவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கம்மின்ஸ், ஹேசல்வுட்  என முக்கிய பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலிய அணியில் ஆடாத போதும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களிலும் சுருண்டது.

இங்கிலாந்து அணியின் மோசமான ஃபார்மிற்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலர், அந்த அணியின் ஆட்டத்திறனை விமர்சனம் செய்து வருகின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டித் தோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், 'எங்களது பவுலிங்கை பொறுத்தவரையில், நாங்கள் நல்ல லெங்த்தில் வீசியிருக்க வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் தான் அதனை செய்தோம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுகளை, மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம்.

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்கான அனைத்து தகுதியும் எங்களிடம் இருக்கிறது. அதில் நான் உறுதியாக இருக்கிறேன். செய்த தவறுகளையே திரும்ப செய்வதை நிறுத்தினால் போதும். இந்த தோல்வியில் இருந்து பாடங்களைக் கற்று, இனிவரும் போட்டிகளில் ஜெயிப்போம்' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜோ ரூட்டின் இந்த கருத்திற்கு, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்  விமர்சனம் செய்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், 'அணியிலுள்ள வீரர்கள் செய்த தவறை மீண்டும் செய்தால், அதனை சரி செய்ய வேண்டியது யாருடைய பொறுப்பு?. அப்புறம் நீங்கள் ஏன் கேப்டனாக இருக்கிறீர்கள்?. உங்களது பந்து வீச்சாளர்களை சரியாக பந்து வீச உங்களால் செய்ய முடியவில்லை என்றால், மைதானத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?.

ஜோ ரூட் திரும்ப வந்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், ஒரு கேப்டனாக உங்களது பேச்சை அணி வீரர்கள் கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால், அவர்களை அணியில் இருந்து தூக்கி எறியுங்கள். 

ஒரு கேப்டனாக, உங்களது பேச்சை கேட்கும் வீரருக்கு வாய்ப்பளியுங்கள். அல்லது உங்களுக்கு என்ன தேவை என்பதை வலுவான உரையாடல் மூலம் போட்டியின் போது தெரியப்படுத்துங்கள். அது தான் கேப்டன்சி' என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை