விராட் கோலி சச்சினிடம் ஃபேன் செய்து டிப்ஸ் கேட்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!

Updated: Fri, Dec 31 2021 15:09 IST
Image Source: Google

சமகால கிரிக்கெட்டின்  தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தகர்த்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பெரிய ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.

கடைசியாக 2019ஆம் ஆண்டு சதமடித்த விராட் கோலி, அதன் பின்னர் 2020 மற்றும் 2021 ஆகிய 2 ஆண்டுகளிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து, இப்போதுதான் முதல் முறையாக தொடர்ச்சியாக 2 ஆண்டுகள், ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்திருக்கிறார்.

விராட் கோலி பெரிய ஸ்கோர் அடிக்காமல் அவுட்டாவதற்கு முக்கிய காரணம் செய்த தவறையே திரும்பத்திரும்ப செய்வதுதான். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே ஆறாவது, ஏழாவது ஸ்டம்ப் லைனில் செல்லும் பந்துகளை கவர் டிரைவ் ஆடமுயன்றுதான் அவுட்டாகிறார். 

இங்கிலாந்து சுற்றுப்பயணம் முழுவதுமாக அப்படித்தான் அவுட்டானார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு மிகவும் வெளியே சென்ற பந்தை விரட்டிச்சென்று அடித்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி ஆட்டமிழந்த விதம் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து விராட் கோலியை அனைவரும் 2004 சிட்னி டெஸ்ட்டில் சச்சின் ஆடியதை போல கவர் டிரைவே அடிக்காமல் ஆடுமாறு அறிவுறுத்துகின்றனர். சச்சின் டெண்டுல்கர் 2004 ஆஸி., சுற்றுப்பயணம் மற்றும் அதற்கு முந்தைய சில போட்டிகளில் கவர் டிரைவ் ஆடியே தொடர்ந்து அவுட்டாகி கொண்டிருந்தார். 

இதையடுத்து, சிட்னியில் நடந்த டெஸ்ட்டில் கவர் டிரைவே ஆடக்கூடாது என்று முடிவெடுத்த சச்சின் டெண்டுல்கர், அந்த போட்டி முழுவதும் ஒரு கவர் டிரைவ் கூட ஆடாமல் 241 ரன்களை குவித்தார். எனவே அதே மாதிரி விராட் கோலி கவர் டிரைவ் அடிக்காமல் ஆட முயற்சிக்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்திவருகின்றனர்.

அதையேதான் முன்னாள் ஜாம்பவானும் சச்சின், கோலி மாதிரியான தலைசிறந்த வீரர்களுக்கான முன்னோடியுமான சுனில் கவாஸ்கரும் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், “கோலி சச்சினுக்கு கால் செய்து புத்தாண்டு வாழ்த்து கூறிவிட்டு, அப்படியே பேட்டிங் டிப்ஸ் கேட்கலாம். சச்சின் 2003-04 ஆஸி. சுற்றுப்பயணத்தில் கவர் டிரைவே ஆடாமல் இரட்டை சதம் அடித்த அனுபவம் குறித்து கேட்டறியலாம். சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனையை பெறுவது விராட் கோலி பெரியளவில் உதவும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை