ஷுப்மன் கில்லின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன - ஆகாஷ் சோப்ரா!

Updated: Fri, Aug 11 2023 22:35 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 3ஆவது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 2024 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் சிறப்பாக செயல்பட வேண்டிய இஷான் கிசான், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்கள் முதலிரண்டு போட்டிகளில் சுமாராக செயல்பட்டு 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸிடம் அடுத்தடுத்த தோல்விகளை இந்தியா சந்திக்க காரணமாக அமைந்தனர்.

அப்படி சுமாராக செயல்பட்ட இளம் வீரர்களில் ஷுப்மன் கில் இந்த சுற்றுப்பயணம் முழுவதுமே சொதப்பி வருவது ரசிகர்களுக்கு வியப்பாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் 2018 அண்டர்19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2021ஆம் ஆண்டு மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து 2022 ஐபிஎல் தொடரில் முதல் சீசனிலேயே குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்.

அதே வேகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற அனைத்து வகையான தொடர்களிலும் சிறப்பாக அசத்திய அவர் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும், டி20 கிரிக்கெட்டில் சதமும் விளாசினார். மேலும் ஐபிஎல் 2023 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் சச்சின், விராட் கோலி வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர்ஸ்டாராக உருவெடுத்துள்ளதாக அனைவரும் பாராட்டினர்.

ஆனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சொதப்பிய அவர் பலவீனமான எதிரணியாக இருந்தாலும் சவாலான பிட்ச்களை கொண்டுள்ள இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் நடந்த டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான தொடர்களிலும் மொத்தம் 9 இன்னிங்ஸில் வெறும் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து ஏமாற்றத்தை கொடுத்தார். அதிலும் குறிப்பாக தம்முடைய டி20 கேரியரில் ஃபிளாட்டான பிட்ச்சை கொண்டுள்ள அகமதாபாத் மைதானத்தில் 1 டி20 போட்டியில் 126 ரன்கள் அடித்துள்ள அவர் எஞ்சிய மைதானங்களில் விளையாடிய 8 போட்டிகளில் வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

அதனால் வண்டி அகமதாபாத் மைதானத்தில் மட்டுமே ஓடும் என்ற வகையில் செயல்படும் அவரை அதற்குள் அவசரப்பட்டு சச்சின், விராட் ஆகியோருடன் ஒப்பிட்டு விட்டோமோ என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் ஷுப்மன் கில் ஐபிஎல் தொடரில் அசத்தியதை பார்த்து அடுத்த கிங்’காக உருவெடுத்துள்ளார் என்று நினைத்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஆனால் சவாலான வெளிநாடுகளில் ஸ்லோவான பிட்ச்களில் கில் ரொம்பவே தடுமாறுவதாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தற்சமயத்தில் ஷுப்மன் கில் ஃபார்மில் பிரச்சனை இருக்கிறது. ஐபிஎல் தொடரின் போது இனிமேலும் அவர் வெறும் பிரின்ஸ் கிடையாது மாறாக கிங்’காக மாறியுள்ளார் என்று பல இடங்களில் படித்தேன். ஆனால் அத்தொடருக்கு பின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவிக்காத அவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும் ரன்கள் அடிக்கவில்லை. அதைத் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒன்றில் அரை சதமடித்த அவர் எஞ்சிய போட்டிகளில் 34 ரன்கள் எடுத்தார்.

அதன் பின் நடந்த 3 டி20 போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முழுவதுமாகவே சிறப்பாக செயல்படவில்லை. இதிலிருந்து என்னால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். பிட்ச் சற்று மெதுவாக இருந்தால் அவர் நல்ல ஃபார்ம் மற்றும் ரிதத்தில் விளையாடுவதற்கு தடுமாறுகிறார்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை