WI vs AUS, 3rd T20I: டிம் டேவிட் மிதிரடி சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
WI vs AUS, 3rd T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டிம் டேவிட் 37 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 125 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 62 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 9 ரன்களுக்கும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 12 ரன்களுக்கும், ரோவ்மன் பாவெல் 9 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கேப்டன் ஷாய் ஹோப் சதமடித்து அசத்தியதுடன் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 102 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேக்ஸ்வெல் 20 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 15 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து கேப்ட மிட்செல் மார்ஷ் 22 ரன்களுக்கும், கேம்ரூன் க்ரீன் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 87 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழது தடுமாறியது. அதன்பின் இணைந்த டிம் டேவிட் மற்றும் மிட்செல் ஓவன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பைத் தடுத்து நிறுத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 17 பந்துகளில் அரைசதத்தையும், 37 பந்துகளில் சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இது அவருடைய முதல் டி20 சதமாக அமைந்ததுடன், அணியின் வெற்றிக்கும் வழிவகுத்தது.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 6 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் என 102 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய மிட்செல் ஓவன் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.