சர்வதேச டி20 கிரிகெட்டில் அதிவேக சதம்; ஆஸ்திரேலியாவுக்காக சாதனை படைத்த டிம் டேவிட்!
Tim David T20I Century: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டிம் டேவிட் 37 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன், சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 102 ரன்களையும், பிராண்டன் கிங் 62 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிம், ஆடம் ஸாம்பா மற்றும் மிட்செல் ஓவன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் சதமடித்து அசத்தியதுடன் 37 பந்துகளில் 6 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் என 102 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய மிட்செல் ஓவன் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் டிம் டேவிட் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் டிம் டேவிட் 37 பந்துகளில் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் மற்றும் உலகின் மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். உலகளவில் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வீரர்கள்
- 35 பந்துகள் - ரோஹித் சர்மா vs இலங்கை, 2017
- 35 பந்துகள் - டேவிட் மில்லர் vs வங்கதேசம், 2017
- 37 பந்துகள் - டிம் டேவிட் vs வெஸ்ட் இண்டீஸ், 2025*
- 37 பந்துகள் - அபிஷேக் சர்மா vs இங்கிலாந்து, 2025
- 39 பந்துகள் - ஜான்சன் சார்லஸ் vs தென் ஆப்பிரிக்கா, 2023
ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சத
- 37 பந்துகள் - டிம் டேவிட் vs வெஸ்ட் இண்டீஸ், 2025*
- 43 பந்துகள் - ஜோஷ் இங்கிலிஸ் vs, 2024
- 47 பந்துகள் - ஆரோன் பிஞ்ச் vs.இங்கிலந்து, 2013
- 47 பந்துகள் - கிளென் மேக்ஸ்வெல் vs இந்தியா, 2023
Also Read: LIVE Cricket Score
இதுதவிர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5 அல்லது அதற்கு குறைவான இடத்தில் பேட்டிங் செய்து சதமடித்த வீரர்கள் பட்டியலிலும் டிம் டேவிட் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்தின் மார்க் சாப்மேன் 5ஆம் இடத்தில் பேட்டிங் செய்து சதமடித்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 104 ரன்களைச் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.