WI vs ENG 1st Test: டிராவில் முடிந்தது ஆண்டிகுவா டெஸ்ட்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் 109 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீசின் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கீமர் ரோச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 375 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பானர் 123 ரன்னும், பிராத்வெயிட் 55 ரன்னும், ஹோல்டர் 45 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், லீச், ஓவர்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது. ஆட்டத்தின் பிற்பாதியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டடது. 4ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தது. கிரௌலி 117 ரன்னுடனும், ஜோ ரூட் 84 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதம் விளாசினார். கிரௌலி 121 ரன்னிலும், ரூட் 109 ரன்னிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால் இங்கிலந்து இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 349 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதைத்தொடர்ந்து, 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களான பிராத்வெயிட் 33 ரன்னிலும், காம்பெல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த புரூக்ஸ் 5 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் 5ஆம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் பானர் 38 ரன்னிலும், ஹோல்டர் 37 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இதனால் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
ஆட்ட நாயகன் விருது வெஸ்ட் இண்டீஸ் வீரர் பானருக்கு வழங்கப்பட்டது. மேலும் இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பார்படாசில் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது.