WI vs ENG, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து!

Updated: Thu, Dec 07 2023 10:53 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.  தொடக்க வீரர்கள் அலிக் அதானஸ் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து பிராண்டன் கிங் 17 ரன்களிலும், கேசி கார்டி, ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் சாம் கரண் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - செர்ஃபென் ரூதர்ஃபோர்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 63 ரன்களுக்கு ரூதர்ஃபோர்ட் ஆட்டமிழக்க, இப்போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்கக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் 39.4 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டோன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சால்ட் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸாக் கிரௌலி 3, பென் டக்கெட் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து குடகேஷ் மோட்டி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜேக்ஸுடன் இணைந்த ஹாரி ப்ரூக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த வில் ஜேக்ஸ் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 74 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் தனது பங்கிற்கு 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 58 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 32.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 1-1 என்ற  கணக்கில் சமன்செய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை