WI vs ENG,1st Test (Day 5): விண்டீஸுக்கு 286 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 140 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 375 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நக்ருமா போனர் 123 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் கிரேக் ஓவர்டன், மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் 64 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி ஸாக் கிரௌலி, ஜோ ரூட் ஆகியோரின் அபாரமான சதத்தின் மூலம் ஐந்தாம் நாள் உணவு இடைவேளைக்கு முன் 6 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஸாக் கிரௌலி 121 ரன்களையும், ஜோ ரூட் 109 ரன்களையும் சேர்த்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.