WI vs IND, 1st T20I: விண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி!

Updated: Fri, Jul 29 2022 23:40 IST
WI vs IND, 1st T20I: India defeat West Indies by 68 runs (Image Source: Google)

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினர். சூர்யகுமார் யாதவ் 16 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 3ஆம் வரிசையில் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். 

அடுத்து வந்த ரிஷப் பந்த் 14 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னுக்கும் வெளியேற, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 44 பந்தில் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

ஜடேஜாவும் 16 ரன்களுக்கு நடையை கட்டினார். இறுதியில் தினேஷ் கார்த்திக் வழக்கம் போல அதிரடியாக விளையாடி சிறப்பாக முடித்து கொடுத்து, தான் தான் இந்திய அணியின் ஃபினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டினார். 19 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை அடித்து முடித்து கொடுத்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களைக் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அறிமுக வீரர் அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் 15 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் ரன் ஏதுமின்றியும், ஷமாரா ப்ரூக்ஸ் 20 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து வந்த வீரர்களாலும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை