WI vs IND, 1st T20I: இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!

Updated: Thu, Aug 03 2023 23:54 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது. 

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து விண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை களமிறங்கினர். இதில் கைல் மேயர்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி 28 ரன்களைச் சேர்த்திருந்த பிராண்டன் கிங்கும் யுஸ்வேந்திர சஹால் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜான்சன் சார்லஸும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின் இணைந்த நிக்கோலஸ் பூரன் - கேப்டன் ரோவ்மன் பாவேல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளாக விளாசித்தள்ளிய நிக்கோலஸ் பூரன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஹெட்மையரும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து கேப்டன் ரோவ்மன் பாவெலும் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி  6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் 3 ரன்களுக்கும், இஷான் கிஷான் 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா  இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் திலக் வர்மா சந்தித்த இரண்டாவது மற்றும் 3ஆவது பந்தில் சிக்சர்களை விளாசி அசத்தினார்.

அதன்பின் 21 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் விக்கெட்டை இழக்க, அறிமுக போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 3 சிக்சர், 2 பவுண்டரி என 39 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். 

இதையடுத்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 12 ரன்களை எடுத்த நிலையில் கைல் மேயர்ஸினால் ரன் அவுட் செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து 13 ரன்களுக்கு அக்ஸர் படேலும் தனது விக்கெட்டை இழக்க இந்திய அணியின் தோல்வியும் உறுதியானது. ஆனால் அடுத்து களமிறங்கிய அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாச, கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏறப்பட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கடைசி ஓவரை வீசிய ரோமாரியோ செஃபெர்ட், அந்த ஓவரில் ஒரு விக்கெட், ஒரு ரன் அவுட் உள்பட 4 ரன்களை மட்டுமே கொடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலைப் பெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை