WI vs IND 1st Test: மாஸ் காட்டும் அஸ்வின்; தடுமாறும் விண்டீஸ்!
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியுடன் வரும் இந்தியாவும், முதல் முறையாக ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறாமல் போன ஏமாற்றத்துடன் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று டொமினிகாவில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் அறிமுக வீரர்களாகவும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் அலிக் அதானாஸ் அறிமுக வீரராகவும் இடம்பிடித்தனர்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெப்டன் கிரேக் பிராத்வைட் - டெக்நரைன் சந்தர்பால் இணை நிதான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 12 ரன்களை எடுத்திருந்த டெக்நரைனையும், 20 ரன்களைச் சேர்த்திருந்த கிரேக் பிராத்வைட்டையும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினார்.
அதன்பின் களமிறங்கிய ரெய்மன் ரெய்ஃபெர் 2 ரன்களுக்கு ஷர்தூல் தாக்கூரிடம் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த பிளாக்வுட்டும் முகமது சிராஜின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். இந்த காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
இதில் அறிமுக விரர் அலிக் அதானாஸ் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.