WI vs IRE, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை சமன்செய்த அயர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஜமைக்காவிலுள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின் அணியின் முன்வரிசை வீரர்கள் ஷாய் ஹோப், க்ரீவ்ஸ், பூரன், ரோஸ்டன் சேஸ், பொல்லார்ட் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஷமாரா ப்ரூக்ஸ், ரொமாரியா செஃபெர்ட், ஓடியன் ஸ்மித் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தினால் 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபெர்ட் 50 ரன்களையும், ஓடியன் ஸ்மித் 46 ரன்களையும், ப்ரூக்ஸ் 43 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து தரப்பில் ஆண்டி மெக்பிரையன் 4 விக்கெட்டுகளையும், கிரேக் யங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 36 ஓவர்களாக குறைக்கப்பட்டு, அயர்லாந்து அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனை எதிர்கொண்ட அயர்லாந்து அணியில் வில்லியன் போட்டர்ஃபீல்ட் 26, பால் ஸ்டிர்லிங் 21, ஆண்டி மெக்பிரையன் 35 என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்து களமிறங்கிய ஹேரி டெக்டர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் அயர்லாந்து அணி 32.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.