WI vs NZ, 3rd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!

Updated: Mon, Aug 22 2022 08:59 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி பார்போடாஸில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் - கைல் மேயர்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.

இதில் இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 51 ரன்களில் ஷாய் ஹோப் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார்.

மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் மேயர்ஸ் சதம் விளாசி அசத்தினார். பின் 105 ரன்கள் சேர்த்த நிலையில் அவரும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய பிராண்டன் கிங், ஷமாரா ப்ரூக்ஸ், கேசி கார்டி, ஜேசன் ஹோல்டர் என அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதற்கிடையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரனும் 91 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஃபின் ஆலன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மார்ட்டின் கப்தில் - டேவன் கான்வே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர்.

பின்னர் மார்ட்டின் கப்தில் 57 ரன்களிலும், டேவன் கான்வே 56 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டாம் லேதம் - டெரில் மிட்செல் இணையும் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தனர். அதைத்தொடர்ந்து 63 ரன்களில் டேரில் மிட்செலும், 69 ரன்களில் டாம் லேதமும் விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில் மைக்கேல் பிரேஸ்வெல், ஜேம்ஸ் நீஷம் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தினர். 

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தினர். மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லேதம் ஆட்டநாயகனாகவும், மிட்செல் சாண்ட்னர் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை