WI vs SA, 3rd T20I: வானவேடிக்கை காட்டிய விண்டிஸ்; தென் ஆப்பிரிக்காவை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!

Updated: Mon, May 27 2024 13:23 IST
Image Source: Google

 

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இத்தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டி காக் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹென்றிக்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன் 18 ரன்களிலும், குயின்டன் டி காக் 19 ரன்களிலும், மேத்யூ பிரீட்ஸ்கி 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் இணைந்த கேப்டன் வேண்டர் டுசென் - வியான் முல்டர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெலிப்படுத்திய வேண்டர் டுசென் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 51 ரன்கள் எடுத்த நிலையில் வேன்ட்ர் டுசென் ஆய்யமிழக்க, அவரைத்தொடர்ந்து வியான் முல்டாரும் 36 ரன்களுக்கு  ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஒபேத் மெக்காய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் பிராண்ட்ன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிராண்டன் கிங் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரனக்ளைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஜான்சன் சார்லஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 69 ரன்களை விளாசினார். 

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கைல் மேயர்ஸ் - அலிக் அதானாஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் கைல் மேயர்ஸ் 4 சிக்ஸர்களுடன் 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 13.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-0 என்ற கணக்கில் தொடரிலும் அபார முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை