NZ vs NED, 1st ODI: வில் யங் அபார சதம்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மவுண்ட் மங்குனியில் இன்று நடைபெற்றது.
இப்போட்டிடில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் மைபர்க், மேக்ஸ் ஓடவுட், விக்ரட்ஜிட் சிங், பாஸ் டி லீட், எட்வர்ட்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரிப்போன் - பீட்டர் சீலர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடிய மைக்கேல் ரிப்போன் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பீட்டர் சீலர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 49.4 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மைக்கேல் ரிப்போன் 67 ரன்களை அடித்தார். நியூசிலாந்து தரப்பில் பிளைர் டிக்னர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹென்றி நிக்கோலஸ் - வில் யங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
இதில் ஹென்றி நிக்கோலஸ் அரைசதம் கடந்து 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த வில் யங் சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் 38.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த வில் யங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.