இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றிருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!

Updated: Tue, Aug 22 2023 22:52 IST
Image Source: Google

நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதிவரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ, சமீபத்தில் அறிவித்தது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். பந்துவீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். திலக் வர்மா, பிரசீத் கிருஷ்ணா போன்ற வீரர்களுக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இருந்தாலும், சஞ்சு சாம்சன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கியத்துவம் கொடுக்காதது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், யுஸ்வேந்திர சாஹலுக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை விமர்சித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், “ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வேகப்பந்து வீச்சில் வலுவான அணியாக இருந்தாலும், சுழற்பந்து வீச்சில் போதிய பலம் இல்லை என்பதே எனது கருத்து. ஏனெனில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. தற்போதைய இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலை விட மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதே உண்மை.

குறிப்பாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் யுஸ்வேந்திர சாஹல் மிக சிறந்த வீரர். கடந்த ஒரு சில போட்டிகளில் சாஹல் தனது பங்களிப்பை செய்ய தவறியதால் அவரை குறைத்து மதிப்பிட கூடாது. மிக சிறந்த வீரர்களின் திறமையை ஓரிரு போட்டிகளை அடிப்படையாக வைத்து தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. உலகக்கோப்பை தொடரிலாவது யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை