மகளிர் ஆஷஸ் 2022: ஹீதர் நைட் அதிரடி; ஃபாலோ ஆனை தவிர்க போராடும் இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 327 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் இருந்தது. அந்த அணியில் சதர்லேண்ட் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்கைவர், ப்ரண்ட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இன்று தொடங்கிய இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கெத்தரின் பிரண்ட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் லாரன் வின்ஃபில்ட், டாமி பியூமண்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகளை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் கேப்டன் ஹீதர் நைட் 127 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் எல்லிஸ் பெர்ரி, சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி 102 ரன்கள் பின் தங்கிய நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.