மகளிர் ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலையில் இருந்தன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலிசா ஹீலி 16 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தஹிலா மெக்ராத் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் பெத் மூனி, ஆஷ்லே கார்ட்னர் தலா 32 ரன்களையும், எல்லிஸ் பெர்ரி 34 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி களமிறங்கிய நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 14 ஓவர்களில் 119 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சோபியா டங்க்லி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டேனியல் வையட் - நாட் ஸ்கைவர் பிரண்ட் ஓரளவு தாக்குபிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 26 ரன்கலில் டேனியல் வையட்டும், 25 ரன்களில் நாட் ஸ்கைவரும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய அலிஸ் கேப்ஸி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலிஸ் கேப்ஸி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் இங்கிலாந்து அணி 13.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.