மகளிர் ஆஷஸ்: பரபரப்பான ஆட்டத்தில் போராடி தோல்வியைத் தவிர்த்த இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 337 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸைத் டிக்ளர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாளில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன்பின் 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ரேச்சல் ஹெய்னஸ், அலிசா ஹீலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 12 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. பின்னர் மழை குறுக்கிட்டதன் விளையாவாக மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 52 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இன்றைய நாளின் தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய பெத் மூனி 68 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் எல்லிஸ் பெர்ரி 41, தஹிலா மெக்ராத் 34, கர்ட்னர் 38 ரன்களைச் சேர்த்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 64 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 216 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 63 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் கேத்ரின் பிரண்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு வின்ஃபீல்ட் 33, பியூமண்ட் 36 என அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின்னர் களமிறங்கிய ஹீதர் நைட் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நாட் ஸ்கைவர் அபாரமாக விளையாடி 58 ரன்களையும், சோஃபி டாங்க்லி 45 ரன்களையும் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 25 ரன்களே தேவைப்பட்டது.
ஆனால் அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
கடைசி இரண்டு ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிபெற 13 ரன்களே இருந்த நிலையில், அந்த அணியிடம் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இதனால் இப்போட்டியில் வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இறுதியில் இங்கிலாந்து டெய்ல் எண்டர்கள் சிறப்பாக செயல்பட்ட அணியை தோல்வியிலிருந்து மீட்டனர். இதன்மூலம் 48 ஓவர்களில் இங்கிலாந்து 245 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு, போட்டி டிரா ஆனாது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆனபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.