மகளிர் உலகக்கோப்பை 2022: விண்டீஸை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸி.!

Updated: Wed, Mar 30 2022 11:54 IST
Image Source: Google

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் வெலிங்டனில் நடைபெற்ற முதல் அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. 

இப்போட்டி தொடங்கும் முன் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. இதில் ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனைகள் ரேச்சல் ஹெய்ன்ஸும் அலிஸா ஹீலியும் முதல் விக்கெட்டுக்கு 32.4 ஓவர்களில் 216 ரன்கள் குவித்தார்கள். அலிஸா ஹீலி 107 பந்துகளில் 1 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருடைய 4-வது ஒருநாள் சதமாகும். 

அதன்பின் கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 48 ரன்களைச் சேர்த்தார்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் 37 ஓவர்கள் முடிவிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜெஸ் ஜோனஸன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதுடன், மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை