அலிசா ஹீலி அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்த ஆஸ்திரேலிய ஏ அணி!

Updated: Sun, Aug 17 2025 20:02 IST
Image Source: Google

இந்திய மகளிர் ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. 

அதன்பின் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிராண்டு போட்டிகளிலும் இந்திய ஏ அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் நந்தினி காஷ்யப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் ஷஃபாலி வார்மா தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.

அதன்பின் 52 ரன்களில் ஷஃபாலி வர்மா விக்கெட்டை இழக்க, 28 ரன்களில் நந்தினியும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் யஷ்திகா பாட்டியா ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.இதனால் இந்திய மகளிர் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் தஹ்லியா மெக்ராத் 3 விக்கெட்டுகளையும், சாய்னா ஜிஞ்சர், எல்லா ஹெய்வார்ட், அனிகா லெய்ரொட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு தஹ்லியா மெக்ராத் மற்றும் அலிசா ஹீலி இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் ஆரம்பம் முதலே இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களின் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின், இருவரும் இணைந்து 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், தஹ்லியா மெக்ராத் 59 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து  களமிறங்கிய ரேச்சல் ட்ரெனமனும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Also Read: LIVE Cricket Score

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய அலிசா ஹீலி தனது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலிசா ஹீலி 23 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 137 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் ஏ அணி 27.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் ஏ அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இருப்பினும் இந்திய மகளிர் ஏ அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை