அலிசா ஹீலி அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஃபர்ஹானா ஹக் 8 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஷர்மின் அக்தர் 19 ரன்னிலும், கேப்டன் நிகர் சுல்தானா 12 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த ருபியா ஹைதர் - சோபனா மோஸ்டரி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ருபியா ஹைதர் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், இறுதிவரை களத்தில் இருந்த சோபனா மோஸ்டரி அரைசதம் கடந்ததுடன் 66 ரன்களைச் சேர்த்தார். இதன் காரணமாக வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அலனா கிங், ஆஷ்லே கார்ட்னர் உள்ளிட்டோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி தங்களில் அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தினர். அதிலும் குறிப்பாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலிசா ஹீலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதுதவிர இருவரும் இணைந்து 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷ்ப் அமைத்ததுடன், அணியையும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
Also Read: LIVE Cricket Score
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலிசா ஹீலி 20 பவுண்டரிகளுடன் 113 ரன்களையும், போப் லிட்ச்ஃபில்ட் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 84 ரன்களைச் சேர்த்து அணிக்கு வேற்றியை சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 24.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 4ஆவது வெற்றியைப் பதிவு செய்து முதலிடத்தைக் தக்கவைத்துள்ளது.