மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை பறித்தது தென் ஆப்பிரிக்கா!

Updated: Sun, Mar 27 2022 14:07 IST
Image Source: Google

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடிவருகின்றன.

மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதனால் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்களைச் சேர்த்து அசத்தியது. தொடர்ந்த அபாரமாக விளையாடிய இந்த ஜோடி அரைசதம் கடந்து அசத்தினர்.

அதன்பின் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஷஃபாலி வர்மா ஆட்டமிழக்க, அடுத்து வந்த யஷ்திகா பாட்டியா 3 ரன்களோடு வெளியேறி ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து மந்தனாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மிதாலி ராஜ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 64ஆவது அரைசதத்தைக் கடந்து பிரமிக்கவைத்தார்.

பின் 71 ரன்களில் ஸ்மிருதி மந்தனாவும், 68 ரன்களில் மிதாலி ராஜும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடியதுடன் 48 ரன்களையும் சேர்த்தார்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் சப்நைம் இஸ்மைல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் லிசேல் லீ 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த லாரா வோல்வார்ட் - லாரா குட்டால் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.

இதில் லாரா வோல்வார்ட் அரைசதம் கடக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய லாரா குட்டால் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாரா வோல்வார்ட் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் சுனே லூஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மிகோன் டு பிரீஸ் - மரிசான் கேப் இணை பொறுப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களை இருக்கையின் நுணிக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி கடைசிப் பந்தில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை