மகளிர் உலகக்கோப்பை 2022: தொடரிலிருந்து வெளியேறியது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடரானது சுவாரஷ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை சூசி பேட்ஸ் 126 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் நிதா தார் அரைசதம் கடந்தார். ஆனால் மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இத்துடன் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளின் 2022 உலகக் கோப்பைப் பயணம் முடிவடைந்தது. பாகிஸ்தான் அணி 7 ஆட்டங்களில் 1 வெற்றி மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணி 7 ஆட்டங்களில் 3 வெற்றிகளை மட்டும் பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ளது. சொந்த மண்ணில் போட்டி நடைபெற்றாலும் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாத சோகத்துடன் பயணத்தை நிறைவு செய்துள்ளது நியூசிலாந்து அணி.