மகளிர் உலகக்கோப்பை 2022: ராணா, பூஜா அபாரம்; பாகிஸ்தானுக்கு 245 இலக்கு!
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகரித்து வருகிறது.
அதன்படி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் மவுண்ட் மங்குனியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஷஃபாலி வர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா - தீப்தி ஷர்மா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் மந்தனா அரைசதம் அடித்த கையோடு 52 ரன்களில் ஆட்டமிழக்க, தீப்தி சர்மா 40 ரன்களில் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்நே ராணா - பூஜா வஸ்த்ரேகர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரெகர் 67 ரன்களையும், ஸ்நே ராணா 53 ரன்களையும் சேர்த்தனர்.