மகளிர் ஆசிய கோப்பை: ஆல் ரவுண்டராக அசத்திய ஷஃபாலி வர்மா; இந்தியாவுக்கு நான்காவது வெற்றி!

Updated: Sat, Oct 08 2022 16:16 IST
Women’s T20 Asia Cup: All-round Shafali Verma helps India sink Bangladesh by 59 runs (Image Source: Google)

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

முதல் விக்கெட்டுக்கு ஷஃபாலி வர்மா- ஸ்மிருதி மந்தனா ஜோடி 96 ரன்கள் எடுத்தனர். 47 ரன்னில் மந்தனா எதிர் பாராத வகையில் ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 55 ரன்கள் எடுத்த போது போல்ட் முறையில் வெளியேறினார்.

இதனால் 16 ஓவரில் இந்திய அணி 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடர்ந்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ரிச்சா கோஷ் 4 ரன்னிலும் கிரன் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து தீப்தி சர்மா -ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 

இறுதியில் ஓவரில் தீப்தி சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ருமானா அஹ்மது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் ஃபர்கானா ஹோக்- முர்ஷிதா காதுன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். பின் 21 ரன்களில் காதும் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஃபர்கானாவும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தான அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 39 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த வங்கதேச வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 100 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி, இத்தொடரில் தங்களது நான்காவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை