மகளிர் ஆசிய கோப்பை: நிதா தார் அரைசதம்; இந்தியாவுக்கு 138 இலக்கு!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் சித்ரா அமீன் 11, முனீபா அலி 17 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பிஷ்மா மரூஃப் - நிதா தார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிலும் நிதா தார் இந்திய அணி பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்க விட்டு அசத்தினார்.
பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பிஷ்மா மரூஃப் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த நிதா தர் 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மேலும் இது அவரது 6ஆவது டி20 அரைசதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிதா தர் 56 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.