மகளிர் டி20 சேலஞ்ச்: சுப்பர்நோவாஸை 163 ரன்களில் சுருட்டிய டிரெயில்பிளேசர்ஸ்!
ஐபிஎல் தொடரைப் பொன்றே இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் டி20 சேல்ஞ்ச் என்ற டி20 தொடரை பிசிசிஐ நடத்திவருகிறது.
இதில் நடப்பாண்டு சீசனின் முதல் போட்டி இன்று புனேவிலுள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரெயில்பிளேசர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சூப்பர்நோவாஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர்நோவாஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் பிரியா புனியா - டோட்டின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதன்பின் டோட்டின் 32 ரன்களில் ஆட்டமிழக்க, பிரியா புனியா 22 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹர்லீன் டியல் - கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுர் ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஹர்லீன் டியல் 35 ரன்னிலும், ஹர்மன்ப்ரித் கவுர் 37 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சூப்பர்நோவாஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. டிரெயில்பிளேசர்ஸ் அணி தரப்பில் ஹீலே மேத்யூஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.