மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் கவனமும் இருந்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜார்ஜியா பிளிம்மர் 17 ரன்களில் ஆட்டமிழக்க. அவரைத்தொடர்ந்து 28 ரன்களில் சூஸி பேட்ஸும் விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெர் 9 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்ப, நியூசிலாந்து மகளிர் அணி 58 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் சோஃபி டிவைன் மற்றும் புரூக் ஹாலிடே இணை நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரியையும் மெல்ல மெல்ல உயர்த்தினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோஃபி டிவைன் 25 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தர்.
அவரைத்தொடர்ந்து 22 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் புரூக் ஹாலிடேவும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளையும், சதியா இக்பால், நிதா தார் மற்றும் ஒமைமா சொஹைல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியானது விளையாடவுள்ளது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் அலியா ரியாஸ் ரன்கள் ஏதுமின்றியும், இராம் ஜாவெத் 3 ரன்களிலும், சதாஃப் ஷமாஸ் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான முனீபா அலி 15 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஃபாத்திமா சனாவும் 21 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் பாகிஸ்தான் மகளிர் அணி 11.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 3 விக்கெட்டுகளையும், எடன் கார்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் மற்றும் இந்திய மகளிர் அணிகள் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்துள்ளனர்.