AUSW vs SAW, 2nd T20I: லாரா வோல்வார்ட் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது தென் ஆப்பிரிக்கா!

Updated: Sun, Jan 28 2024 12:35 IST
AUSW vs SAW, 2nd T20I: லாரா வோல்வார்ட் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது தென் ஆப்பி (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. கான்பெர்ராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி விளையாடிய அந்த அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி 13 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய தஹ்லியா மெக்ராத்தும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். அதன்பின் 29 ரன்கள் எடுத்த நிலையில் அலிசா ஹீலி ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் எடுத்த நிலையில் தஹ்லியா மெக்ராத்தும் 23 ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதையடுத்து போல் லிட்ச்ஃபீல்ட் 2 ரன்களுக்கும், எல்லிஸ் பேர்ரி 18 ரன்களுக்கும், ஆஷ்லே கார்ட்னர் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழனந்தனர். இறுதியில் கிரேஸ் ஹாரிஸ் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 31 ரன்களைச் சேர்த்து அணிகு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில் தஸ்மின் பிரிட்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய் மரிசான் கேப்பும் 20 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய சுனே லூஸ் ஒரு ரன்னிலும், அன்னேக் போஷ் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிராக தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தங்களது முதல் டி20 வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லாரா வோல்வார்ட் ஆட்டநாயகியாக தேர்வுசெய்யப்பட்டார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை