உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் போட்டி அட்டவணை மாற்றம்?
அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்கிறது. இதற்காக 10 மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மைதானத்திலும் போட்டி நடக்கும் நாளன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. ஆனால், அக்டோபர் 15 ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்க இருப்பதால், பாதுகாப்பு சிக்கல் ஏற்படும். ஆதலால், அக்டோபர் 14 ஆம் தேதி போட்டி நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
எனினும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடந்த 27 ஆம் தேதி டெல்லியில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பேசிய அவர், “உலகக் கோப்பை போட்டி தேதிகளை மாற்றக்கோரி சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படாது. ஆனால், அட்டவணையில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும். அதுவும் தேதியில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்படுமே தவிர, போட்டி நடக்கும் மைதானங்களில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி உலகக் கோப்பை போட்டி தேதிகள் மாற்றப்பட்ட அட்டவணை இன்று வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் எப்போது என்பது குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.