எங்களது வீரர்கள் அனைத்து துறைகளிலும் அற்புதமாக செயல்பட்டனர் - பாபர் ஆசாம்!

Updated: Tue, Oct 31 2023 22:22 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஓருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 31ஆவது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை குவித்தது. வங்கதேச அணி சார்பாக துவக்க வீரர் லிட்டன் தாஸ் 45 ரன்களையும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 43 ரன்களையும், முகமதுல்லா 56 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பாகிஸ்தான் அணி சார்பாக ஷாஹின் அqப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஜூனியர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் தொடர்ந்து 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபீக் 68 ரன்களும், ஃபகர் ஸமான் 81 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இன்னும் தங்களது அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது வெற்றி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மூன்று வகையான துறைகளிலும் அற்புதமாக செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

அதிலும் குறிப்பாக ஃபகர் ஸமான் 20-30 ஓவர் வரை நின்று பேட்டிங் செய்து விட்டால் அந்த போட்டி நிச்சயம் வித்தியாசமான போட்டியாக மாறிவிடும். அந்த அளவிற்கு அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர். இன்று அவர் தனது அதிரடியான ஆட்டத்தை விளையாடினார். அவரது பேட்டிங்கை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இனிவரும் இரண்டு போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற்று அதன்பின் என்ன நடக்கிறது? என்பதை காணவிருக்கிறோம்.

இந்த போட்டியில் எங்களது அணியின் சார்பாக பந்துவீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி துவக்கத்திலேயே மிகச்சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார். மிடில் ஓவர்களிலும் பங்களாதேஷ் அணியின் வீரர்களை பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு விடாமல் எங்களது அணியின் வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த மைதானத்தில் இந்திய ரசிகர்கள் எனக்கும் எங்களது அணிக்கும் தந்த வரவேற்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை