அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி - ஷிம்ரான் ஹெட்மையர்!

Updated: Sun, Apr 14 2024 14:03 IST
அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி - ஷிம்ரான் ஹெட்மையர்! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் அஷுதோஷ் சர்மா அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்து அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் கேசவ் மகாராஜ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறியது. 

அதிலும் குறிப்பாக அறிமுக வீரர் தனுஷ் கோட்யான் தொடர்ந்து பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். பின் 24 ரன்களில் தனுஷும், 29 ரன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழக்க, கேப்டன் சஞ்சு சாம்சன் 18, ரியான் பராக் 23 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இறுதியில் அந்த அணி வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற சூழலிற்கு தள்ளப்பட்டது. 

ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிம்ரான் ஹெட்மையர் 10 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் போட்டியில் முடிந்து பேசிய ஷிம்ரான் ஹெட்மையர், “இதுபோன்ற சூழலில் விளையாட என்னால் முடிந்தளவு வலைப்பயிற்சியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அதன்படி மற்ற வீரர்கள் தங்களது பயிற்சிகளை முடித்து திரும்பியதும் நான் மீண்டும் சிக்ஸர்களை அடிப்பதற்க்காக பயிற்சிகளை செய்துவருகிறேன். அந்த பயிற்சி தான் எனக்கு இன்றைய போட்டியில் உதவியாக இருந்தது. இதுபோன்ற சூழலில் நீங்கள் ஒருநாள் சிறப்பாக செயல்பட முடியும், ஒருநாள் அது சரியாக அமையாது. 

ஆனால் இன்றைய போட்டியில் நான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் எதிரணி கடுமையான அழுத்தத்தை கொடுத்தது. அதன் பின் நான் முடிந்தளவுக்கு தெளிவாக அடித்தேன். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளை தவறவிட்ட சமயம் டிரெண்ட் போல்ட் என்னிடம், “கவலைப்பட வேண்டாம், இது நம்மால் முடியும்” என்று உத்வேகப்படுத்தினார்.  

மேலும் 5ஆவது பந்திற்கு முன்னதாக நான் போல்டிடம் சென்று என்னால் இந்த பந்தை சரியா அடிக்க முடியவில்லை எனில் ஒரு ரன் ஓடி ஆட்டத்தை சமன்செய்துவிடலாம் என்று கூறினேன். ஏனெனில் ஒருவேளை இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற முடியாவிட்டாலும், ஆட்டத்தை சமன்செய்துவிடல்லாம் என்று எண்ணினேன். ஆனால் அந்த பந்தை நான் ஃபீல்டர்களுக்கு மேல் தூக்கி அடித்ததுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தேன். குடும்பத்தை விட்டு தூரத்தில் இருக்கும் சமயத்தில் இதுபோன்ற ஒவ்வொரு தருணத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை