WPL 2023 Auction: ஆதிக்கம் செலுத்திய ஸ்மிருதி, கார்ட்னர், ஹர்மன்ப்ரீத்!
மகளிருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான முதல் படியாக இன்று வீராங்கனைகள் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று உலகளவில் மிகவும் பிரபலமான தொடராக எழுச்சி கண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அதிகம் கோடிகள் குவியும் இடமாகவும் இது உள்ளது.
ஐபிஎல்-ஐ பார்த்த மற்ற நாடுகளும் உள்நாட்டு தொடர்களை தொடங்கிவிட்டன. எனவே அடுத்தகட்டமாக மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரையும் நடத்த கடந்த ஓராண்டிற்கும் மேல் பேச்சுவார்த்தை நடந்துவந்த சூழலில் இந்தாண்டு தொடங்கவுள்ளது.
இந்த ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் களமிறங்குகின்றன.
இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 15 - 18 வீராங்கனைகளை தேர்வு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 90 வீராங்கனைகள் இந்த ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர். இதற்காக உலகம் முழுவதும் இருந்து 1, 525 வீராங்கனைகள் பதிவுசெய்த நிலையில் 246 இந்தியர்கள், 163 வெளிநாட்டினர் என 409 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியும் ரூ.12 கோடி வரை செலவு செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏலத்தின் முதல் செட்டிலே இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதிலும் முதல் வீராங்கனையாக இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் ஒவ்வொரு அணியும் போட்டிப்போட்டு ஏலம் கேட்டனர்.
ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக கொண்ட இந்திய நட்சத்திர டாப் ஆர்டர் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவிற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் கடும் போட்டி போட்டனர். இறுதியில் ஆர்சிபி அணி ரூ.3.40 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை தங்கள் வசம் இழுத்தது.
அவரைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.180 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவரைத் தொடர்ந்து ஆஸியின் ஆஷ்லே கர்ட்னரை ரூ.3.20 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸும், எல்லிஸ் பெர்ரியை ரூ.1.70 கோடிக்கு ஆர்சிபி அணிகளும் தட்டி தூக்கின.