WPL 2023: கேப், ஜோனசென் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆர்சிபி - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மீண்டும் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சோபி டிவைன் - எல்லிஸ் பெர்ரி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சோபி டிவைன் 21 ரன்களிலும், அடுத்து வந்த ஹீதர் நைட் 11 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து எல்லிஸ் பெர்ரியுடன் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பின்னர் அதிரடியாக விளையாடி சிக்சரும் பவுண்டரியுமாக விளாசித்தள்ளினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடி காட்டத்தொடங்கிய எல்லிஸ் பெர்ரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின்னர் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 37 ரன்களைச் சேர்த்திர்ந்த ரிச்சா கோஷ் ஆட்டமிழந்தார். ஆனாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 67 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் மெக் லெனிங்கும் 15 ரன்களை மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அலிஸ் கேப்ஸி - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அலிஸ் கேப்ஸி 38 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த மரிசேன் கேப் - ஜேஸ் ஜொனசென் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்து.
ஆனால் கடைசி ஓவரில் ஜோஸ் ஜொனசென் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களையும் அடித்து அனியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது. இதில் மரிசேன் கேப் 32 ரன்களையும், ஜெஸ் ஜொனசென் 29 ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.