WPL 2023: ஆர்சிபியை மீண்டும் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரைவிட்டு வெளியேறின. டெல்லி கேபிடள்ஸிடம் தோற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு பின் தங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, இன்றைய போட்டியில் ஆர்சிபியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஷோபி டிவைன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா - எல்லிஸ் பெர்ரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மந்தனா 24 ரன்கலில் ஆட்டமிழக்க,எல்லிஸ் பெர்ரி 29 ரன்கலுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். பின்னர் வ்ந்த ஹீதர் நைட் 12, கனிக 12 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனாலும் இறுதிவரை போராடிய ரிச்சா கோஷ் 13 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்களைச் சேர்த்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அமிலியா கெர் 3 விக்கெட்டுகளையும், நாட் ஸ்கைவர், இஸி வாங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
126 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஹெய்லி மேத்யூஸ் மற்றும் யஸ்டிகா பாட்டியா ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி முதல் 6 ஓவரில் 53 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இதில் ஹெய்லி மேத்யூஸ் 24 ரன்களுக்கும் யஸ்டிகா பாட்டியா 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் பவுலிங்கில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய அமெலியா கெர், பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு 27 பந்தில் 31 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். இதன்மூலம் 17ஆவது ஓவரில் இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.