WPL 2023: ஆர்சிபி அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். மேலும் இத்தொடர் மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. மேலும் ஏலத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வானார். ரூ. 3.4 கோடிக்கு ஆர்சிபி அணி அவரைத் தேர்வு செய்தது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்சிபி ஆடவர் அணியின் நட்சத்திர பேட்டர்களான விராட் கோலியும், கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்சிஸும் இத்தகவலை காணொளி வழியாக அறிவித்தனர்.
இந்திய அணிக்கு 11 டி20 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள ஸ்மிருதி மந்தனா 6 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியில் டிரைபில் பிளேஸர்ஸ் அணிக்கு நான்கு சீசன்களாக தலைமை தாங்கி, 2020ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார்.
ஆர்சிபி அணியில் எல்லீஸ் பெர்ரி, சோஃபி டிவைன், ஹெதர் நைட் போன்ற பல பிரபல வீராங்கனைகள் உள்ளார்கள். மேலும் மார்ச் 4ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.