WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தூ டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஷஃபாலி வர்மா - மெக் லெனிங் இணை வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் ஷஃபாலி வர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 13 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய அலிஸ் கேப்ஸியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லெனிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதற்கிடையில் அலிஸ் கேப்ஸி 27 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த மெல் லெனிங்கும் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த ஜேமிமா ரோட்ரிக்ஸும் 7 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த அதிரடி வீராங்கனைகள் அனபெல் சதர்லேண்ட் - ஜெஸ் ஜோனசன் இணை அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோன்சன் 11 ரன்களுக்கும், சதர்லேண்ட் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அருந்ததி ரெட்டியும் 5 ரன்களோடு நடையைக் கட்டினார். இறுதியில் ஷிகா பாண்டே அடுத்தடுத்து ஒருசில பவுண்டரிகளை விளாசி ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்ட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்க நோக்கி விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ரன்கள் எதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் அணியின் கேப்டன் பெத் மூனி 12 ரன்களிலும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 15 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வேதா கிருஷ்ணமூர்த்தியும் 12 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய கேத்ரின் பிரைஸும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேசமயம் இப்போட்டியில் அரைசதம டிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஷ்லே கார்ட்னரும் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 40 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவறியதால் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜேஸ் ஜோனசன், ராதா யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.