WPL 2024 Eliminator: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
அதன்படி நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் இணை முதல் இரண்டு ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர்.
அதன்பின் 10 ரன்கள் எடுத்த நிலையில் சோஃபி டிவைன் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவும் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய எல்லி ஸ்பெர்ரி வழக்கம்போல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய திசா கசத் ரன்கள் ஏதுமின்றியும், ரிச்சா கோஷ் 14 ரன்களுக்கும், சோஃபி 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த எல்லிஸ் பெர்ரி அரைசதம் கடந்து அசத்தினார். பின் அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் அதிரடியாக விளையாடி வந்த எல்லிஸ் பெர்ரி 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 66 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜியா வெர்ஹாம் சிக்சர் அடித்து இன்னிங்ஸை முடித்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா - ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் 15 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து யஷ்திகா பாட்டியாவும் 19 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 23 ரன்களில் நாட் ஸகிவரும், 33 ரன்களில் ஹர்மன்ப்ரீத் கவுரும் தனது விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய அமெலியா கெர் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய சாஜனா ஒரு ரன்னிலும், பூஜா வஸ்திரேகர் 4 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்காக போராடிய அமெலிய கெர் 27 ரன்களைச் சேர்த்த நிலையிலும் மும்பை அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. ஆர்சிபி அணி தரப்பில் ஷ்ரெயங்கா பாட்டில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி டபிள்யூபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.