இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று - ஸ்மிருதி மந்தனா!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
ஆனால் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தன. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணியானது தொடக்கம் முதலே நிதானமன ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஒருகட்டத்தில் சோஃபி டிவைன், ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் விக்கெட்டை இழக்க, இறுதியில் எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதில் எல்லிஸ் பெர்ரி 35 ரன்களையும், ரிச்சா கோஷ் 17 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, டபிள்யூபிஎல் தொடரில் முதல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மீண்டும் இன்னொரு முறை இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து வெற்றிகுறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “இந்த மகிழ்ச்சி மனதில் இன்னும் ஓயவில்லை, இதிலிருந்து வெளியே வர இன்னும் கொஞ்ச நேரமாகும். எனது அணியை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். நிறைய ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்திருக்கிறோம். ஆனால், அதில் நாங்கள் சிக்கிக் கொள்ளவில்லை. கடந்த சீசனின் தோல்விகள் எங்களுக்கு நிறையக் கற்றுக் கொடுத்துள்ளன.
எல்லோரும் எங்களை விமர்சித்தபோதும் அணியின் நிர்வாகம் எங்களுக்கு உறுதுணையாக நின்று ஆதரவளித்து ஊக்கப்படுத்தியது. இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. ஆர்சிபி ரசிகர்களிடமிருந்து 'ஈ சாலா கப் நம்தே' என்ற ஒரு கருத்து எப்போதும் வந்து கொண்டிருக்கும். இனிமேல் அது 'ஈ சாலா கப் நம்து' என மாறும் என நம்புகிறேன். இதை ரசிகர்களுக்கு சொல்வது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.