WPL 2024: மேகனா, ரிச்சா கோஷ் அதிரடி; யுபி வாரியர்ஸுக்கு 158 ரன்கள் இலக்கு!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் ம் இரண்டாவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து,அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷோஃபி டிவைன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என 13 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரியும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சப்பினேனி மேகனா - ரிச்சா கோஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேகனா அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 53 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசித்தள்ளிய ரிச்சா கோஷ் 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரிச்சா கோஷ் 12 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் தீப்தி சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஸ்ரேயங்கா பாட்டீல் சிக்சர் அடித்து இன்னிங்ஸை முடித்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 157 ரன்களைச் சேர்த்துள்ளாது. யுபி வாரியர்ஸ் அணி தரப்பில் ராஜேஷ்வர் கெய்க்வாட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.