WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடி ஆர்சிபி அணி அபார வெற்றி!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைற்ற 5ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஹர்லீஜ் தியோல் - கேப்டன் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெத் மூனி 8 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 5 ரன்களிலும், வேதா கிருஷ்ணமூர்த்தி 9 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப நிலையில், மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த ஹர்லீன் தியோல் 22 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஆஷ்லே கார்ட்னர் 7 ரன்களுக்கும், கேத்ரின் பிரைஸ் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த தயாளன் ஹேமலதா - ஸ்நே ராணா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 12 ரன்களை எடுத்திருந்த ஸ்நே ராணா தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தயாளன் ஹேமலதா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 31 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சோஃபி டிவைன் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஸ்மிருதி மந்தனாவுடன் சப்பினேனி மேக்னா இணைத்தார். இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் ஜோடி சேர்ந்த மேக்னா - எல்லிஸ் பெர்ரி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியையும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்னா 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 36 ரன்களையும், எல்லி பெர்ரி 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் நடப்பு சீசனில் ஆர்சிபி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், புள்ளிப்பட்டியளிலும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.