WPL 2025: ஆஷ்லே கார்ட்னர் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வையட் ஹாட்ஜ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேனியல் வையட் 4 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெர்ரி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் ஆர்சிபி அணி 25 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ராக்வி பிஸ்ட் மற்றும் கனிகா அஹுஜா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தா நிலையில் ராக்வி பிஸ்ட் 22 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த கனிகா அஹுஜா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்னிலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
இறுதியில் கிம் கார்த் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜியா வேர்ஹாம் 20 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் டியான்டிரா டோட்டி மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்ய குஜராத் ஜெயண்ட்ஸுக்க் பெத் மூனி - தயாளன் ஹேமலதா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஹேமலதா 11 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பெத் மூனியும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்லீன் தியோலும் 5 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் - போஃப் லிட்ச்ஃபீல்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய் ஆஷ்லே கார்ட்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் அணியையும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் ஆஷ்லே கார்ட்னர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த போப் லிட்ச்ஃபீல்ட் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஆஷ்லே கார்ட்னர் ஆட்டநாயகி விருதை வென்றார்.