WPL 2025: யுபி வாரியர்ஸை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான யுபி வாரியர்ஸ் அணியில் அறிமுக வீராங்கனை ஜார்ஜியா வோல் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி மற்றும் தயாளன் ஹேமலதா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தயாளன் ஹேமலதா 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பெத் மூனி மற்றும் ஹர்லீன் தியோல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. அதன்பின் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்லீன் தியோல் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களை எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஆஷ்லே கார்ட்னரும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய டியாண்டிரா டோட்டினும் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்னிலும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த பெத் மூனி 17 பவுண்டரிகளுடன் 96 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களைச் சேர்த்தது. யுபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளையும், சின்னெலே ஹென்றி, தீப்தி சர்மா, கிராந்தி கௌத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே - கிரேஸ் ஹாரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கிரண் நவ்கிரே முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய அறிமுக வீராங்கனை ஜார்ஜியா வோல்வும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய விருந்தா தினேஷ் ஒரு ரன்னிலும், கேப்டன் தீப்தி சர்மா 6 ரன்னிலும், ஸ்வேதா செஹ்ராவத் 5 ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டுகளை இழந்த நிலையில் மற்றொரு தொடக்க வீராங்கனையான கிரேஸ் ஹாரிஸும் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் அந்த அணி 48 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த உமா சேத்ரி மற்றும் சின்னெலே ஹென்றி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சின்னெலே ஹென்றி 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் 17 ரன்கள் எடுத்திருந்த உமா சேத்ரியும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் சோஃபி எக்லெஸ்டோன் 14 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் யுபி வாரியர்ஸ் அணி 17.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 105 ரன்களில் ஆல் அவுட்டானது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காஷ்வி கௌதம் மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டியான்டிரா டோட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.