WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஷ்லே கார்ட்னர் நியமனம்!

Updated: Wed, Feb 05 2025 13:17 IST
Image Source: Google

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 

இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனை பெத் மூனி செயல்பட்டு வந்தார். இவர் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகள் என வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. 

இதன் காரணமாகவே தற்சமயம் பெத் மூனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஆஷ்லே கார்ட்னருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேற்கொண்டு கடந்த 2023ஆம் ஆண்டு முதல் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் அங்கமாக இருந்து வரும் ஆஷ்லே கார்ட்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பேட்டிங்கில் 324 ரன்களையும், பந்துவீச்சில் 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கேப்டன் பதவி குறித்து பேசிய ஆஷ்லே கார்ட்னர், "குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு ஒரு முழுமையான மரியாதை. இந்த அணியின் ஒரு பகுதியாக இருப்பதை நான் மிகவும் விரும்பினேன், மேலும் வரவிருக்கும் சீசனில் இந்த அருமையான குழுவை வழிநடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அணியுடன் இணைந்து பணியாற்றுவதையும், எங்கள் ரசிகர்களை பெருமைப்படுத்துவதையும் நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

குஜராத் ஜெயண்ட்ஸ் முழு அணி: ஆஷ்லே கார்ட்னர்(கேப்டன்), பெத் மூனி, ஹர்லீன் தியோல், தயாளன் ஹேம்லதா, தனுஜா கன்வர், ஷப்னம் ஷகீல், லாரா வோல்வார்ட், ஃபோப் லிச்ஃபீல்ட், மேக்னா சிங், மன்னத் காஷ்யப், காஷ்வி கௌதம், பிரியா மிஸ்ரா, சயாலி சத்கரே, பார்தி ஃபுல்மாலி, சிம்ரன் ஷேக், டியான்ட்ரா டோட்டின், டேனியல் கிப்சன், பிரகாஷிகா நாயக்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை