WPL 2024: பிப்ரவரி 23 முதல் தொடர் ஆரம்பம்; முதல் போட்டியில் மோதும் மும்பை - டெல்லி!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து தற்போது 17ஆவது சீசன் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை பின்பற்றி மகளிருக்கு என்று பிரத்யேகமாக பிசிசிஐ கடந்த ஆண்டு முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் என்றழைக்கப்படும் டபிள்யூபிஎல் தொடரை பிசிசிஐ கடந்தாண்டு முதல் தொடங்கியது.
கடந்த ஆண்டு தொடங்கிய இத்தொடரின் முதல் சீசனில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் இத்தொடரின் 2ஆவது சீசன் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரானது மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெறௌம் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. மேலும் இத்தொடருக்கான முழு போட்டி அட்டவணையையும் பிசிசிஐ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இத்தொடரில் மொத்தமாக 22 போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், எல்லா போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இறுதிப் போட்டியானது மார்ச் 17 ஆம் தேதி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சீசன் மும்பை மற்றும் நவி மும்பையில் நடைபெற்ற நிலையில், இந்த சீசனுக்கான அனைத்து போட்டிகளும் டெல்லி மற்றும் பெங்களூரு மைதானங்களில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடரின் முதல் 11 போட்டிகள் பெங்களூருவிலும், கடைசி 11 போட்டிகள் டெல்லியிலும் நடத்தப்படவுள்ளது.
அதேசமயம் இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் புள்ளிப்பட்டியளில் எந்த அணி முதலிடத்தில் இருக்கிறதோ அந்த அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்றும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.