உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இருப்பினும் இங்கிலாந்து அணி முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேற்கொண்டு இத்தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்ற நிலையில், புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அந்தவகையில் புதுபிக்கப்பட்ட இந்திய புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணி 68.52 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். அதேசமயம் நியூசிலாந்து அணியானது 50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், வங்கதேச அணி 45.83 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் நீடிக்கின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது வெற்றிபெற்றதன் மூலம், 42.86 புள்ளிகளைப் பெற்றதுடன் 5ஆம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் முன்னதாக 5ஆம் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணியானது இந்த தோல்வியின் மூலம் 42.19 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இதற்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது 38.89 புள்ளிகளுடன் உள்ள நிலையில், பாகிஸ்தான் அணி 19.05 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் இப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.