உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தொடரும் மழை; நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுமா?
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த ஜூன் 18ஆம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த போட்டியில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து 2ஆம் நாளில் தான் டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 3ஆம் நாள் ஆட்டமான நேற்றைய ஆட்டத்தின் 2வது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3ஆம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் கேன் வில்லியம்சன் 12 ரன்களுடனும், ராஸ் டெய்லர் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
இதையடுத்து 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடரவுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய ஆட்டம், தற்போது மழை காரணமாக தாமதமாகியுள்ளது. லேசான சாரல் மழை பெய்துகொண்டே இருப்பதால் இன்றைய போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.