அஷ்வின் இல்லாமல் போனதை என்னால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை - சச்சின் டெண்டுல்கர் விமர்சனம்!
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. இப்போட்டியில் 444 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக அஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. இதைதொடர்ந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 234 ரன்னில் ஆல் அவுடாகி 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றதோடு, அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையையும் படைத்தது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி ட்வீட் செய்திருக்கும் சச்சின் டெண்டுல்கர், “டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். ஸ்டீவ் ஸ்மித்தும் ட்ராவிஸ் ஹெட்டும் முதல் நாளிலேயே ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாற்றும் வகையிலான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டனர். இந்திய அணி ஆட்டத்தில் உயிர்ப்போடு இருக்க முதல் இன்னிங்ஸில் பெரிதாக ஸ்கோர் செய்ய வேண்டிய தேவை இருந்தது.
ஆனால், இந்திய வீரர்களால் அதை செய்ய முடியவில்லை” எனக் கூறியிருக்கும் சச்சின் அணியில் அஸ்வின் இல்லாதது பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். 'இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பௌலரான அஷ்வின் இல்லாமல் போனதை என்னால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.'
திறன்வாய்ந்த ஸ்பின்னர்களால் ஸ்பின்னுக்கு ஏற்ற மைதானங்கள் மட்டுமின்றி எங்கு வேண்டுமானாலும் சிறப்பாக செயல்பட முடியும். அவர்களால் காற்றிலேயே பந்தை நகர்த்த முடியும், மேலும் பிட்ச்சின் பவுன்சை பயன்படுத்தி தந்திரமாக வேரியேஷன்களையும் வீச முடியும். ஆஸ்திரேலிய அணியில் 5 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்திருக்கக்கூடாது. இதை நான் போட்டிக்கு முன்பாகவே கூறியிருந்தேன்.' என சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்திருக்கிறார்.